பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் ராஜ்ஜியம்: என்ஐஏ விசாரணையில் திடுக்!

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

பாகிஸ்தானில் அடைக்கலமாகி உள்ள தாவூத் இப்ராஹிம், அங்கு அதிகாரத்தின் உச்சத்தில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருவது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம், அதன் பின்னர் தனது கூட்டாளிகளுடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தான். அங்கிருந்தபடி, தனது இந்திய கூட்டாளிகள் வாயிலாக மும்பை நிழலுலக செயல்பாடுகளையும் தொடர்ந்து வந்துள்ளான். அவை அனைத்தும் சொத்து பரிமாற்றங்கள், திரைப்பட தயாரிப்புகள், பெரிய இடத்து கட்டபஞ்சாயத்துகள் என்பதாகவே வெளியுலகில் தெரிய வந்தன.

ஆனால், இந்தியாவின் முக்கிய தலைவர்களைக் கொல்லவும், நாடு முழுக்க பயங்கரவாத செயல்களை அரங்கேற்றவும் தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டதும், வளைகுடா தேசங்கள் வாயிலாக இந்திய அமைப்புகள் சிலவற்றுக்கு ஹவாலா முறையில் நிதியாதாரம் சேர்த்ததும் அண்மையில் தெரிய வந்தது. இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ, தாவூத் இப்ராஹிம் தொடர்புகளை துருவ ஆரம்பித்தது.

தாவூத்தின் மும்பை கூட்டாளிகள், முன்னாள் சகாக்கள் அவர்தம் உறவினர்கள் எனப் பலரையும் வளைத்து விசாரித்து வருகிறது. மேலும் மும்பையில் தாவூத் தொடர்பான சட்ட விரோத நில பேரங்களை முடக்கியது. தாவூத் இப்ராஹிம் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் என்ஐஏ-வின் தொடர் விசாரணையில், நாளொரு திடுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தாவூத் இப்ராஹிம் - சோட்டா ஷகீல்
தாவூத் இப்ராஹிம் - சோட்டா ஷகீல்

தாவூத் இப்ராஹிமின் பாகிஸ்தான் இருப்பு குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளியாகி வந்த சூழலில், கராச்சியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாவூத் வசித்து வருவதும், அங்கு அதிகாரத்தின் உச்சத்தில் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருவதும் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக சோட்டா ஷகீலின் குடும்ப விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, தாவூத்தின் இன்னொரு சகாவான சலீம் குரேஷியின் குடும்பத்தார் மும்பையிலிருந்து கராச்சிக்கு பலமுறை சட்டவிரோதமாக சென்று திரும்பியதும் என்ஐஏ விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்தியாவிலிருந்து அமீரகம் மார்க்கமாக பாகிஸ்தான் சென்ற குரேஷி குடும்பத்தினருக்கு கராச்சியில் ராஜ மரியாதை வழங்கப்பட்டதுடன், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தமான சோதனைகள் எதுவுமின்றி உபசரிக்கப்பட்டுள்ளனர்.

கராச்சி விமான நிலையத்தில் நுழையவும், வெளியேறவுமான பாஸ்போர்ட் பதிவுக்கான நடைமுறைகள் கூட அவர்களுக்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் நாட்டின் பிரதமர், அதிபருக்கு இணையான சலுகையும், மரியாதையும் தாவூத் வகையறாக்களுக்கு கராச்சியில் கிடைத்ததையும் என்ஐஏ உறுதி செய்துள்ளது. இந்த சட்ட விரோத பயணங்களின் மூலமாக வேறென்ன பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற நோக்கிலும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், தானிய உதவிக்கு இந்தியாவிடம் கையேந்தும் கட்டாய சூழல் தற்போது எழுந்துள்ளது. இதன் மத்தியில் தாவூத் இப்ராஹிம் தொடர்பான புதிய தகவல்கள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளவே வாய்ப்பிருக்கிறது. இதில் தாவூத்தை ஒப்படைக்கக் கோரும் இந்தியாவின் நீண்ட கால வலியுறுத்தலுக்கு பாகிஸ்தான் உடன்படுமா என்பதும், அங்கே ஆதிக்கம் செலுத்தும் தாவூத் கும்பல் மசியுமா என்பதும் கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in