அம்மாவின் உடல் மீது படுத்தே உயிரைவிட்ட மகள்: துக்கத்தை தாங்க முடியாத நிலையில் நடந்த சோகம்

அம்மாவின் உடல் மீது படுத்தே உயிரைவிட்ட மகள்: துக்கத்தை தாங்க முடியாத நிலையில் நடந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாளாமல் மகளும் உயிர் இழந்த பரிதாபச் சம்பவம் துக்க வீட்டிற்கு வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், காற்றாடிமூடு பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள்(78) ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். தன் வயோதிக காலத்தில் வேலம்மாள் தன் மகள் பகவதி அம்மாளின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் வேலம்மாள் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்தது. உறவினர்கள் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.

தாய் இறந்த துக்கத்தில் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த அவரது மகள் பகவதி அம்மாள் தாயின் சடலத்தின் மீதே சரிந்து விழுந்தார். உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போய் சோதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பகவதி அம்மாள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பகவதி அம்மாள் உடலையும் எடுத்துவந்து, வேலம்மாள் உடலின் அருகில் வைத்தனர். இதில் வேலம்மாளின் இறுதிச்சடங்கு மட்டும் நேற்று மாலை நடந்தது. பகவதி அம்மாளின் மகன் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்தபின்பு தான் வேலம்மாளின் உடல் எடுக்கப்பட உள்ளது. தாய் இறந்த துக்கத்தில் மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in