கொலை செய்து தப்பிப்பது எப்படி?; கூகுளில் தேடி தாயை கொன்ற மகள்: கேரளாவில் நடந்த பயங்கரம்
கேரளத்தில் சொத்துக்காக பெற்ற தாயையே டீயில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டார். கூகுளில் கொலை செய்வது எப்படி என அவர் வித, விதமான வழிகளைத் தேடியதன் மூலமே கொலைக் குற்றவாளி கண்டறியப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், திருச்சூர் கீழ்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்தத் தம்பதியினரின் மகள்களில் ஒருவர் இந்துலேகா. இவருக்குத் திருமணம் முடிந்து இரு குழந்தைகளும் உள்ளனர். இந்துலேகாவின் கணவர் வெளிநாட்டில் வேலைசெய்துவருவதால் தன் தாயுடன் வசித்து வந்தார் இந்துலேகா. இவர் தன் கணவருக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை அடகுவைத்து 8 லட்ச ரூபாய் வரைக் கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மஞ்சள் காமாலை நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்துலேகாவின் தாய் ருக்மணி. மருத்துவர்கள் சிகிச்சையின் போது அவர் உடலில் விஷம் கலந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். கடந்த 23-ம் தேதி ருக்மணி இறந்துவிட்டார். குன்னுங்குளம் போலீஸாருக்குத் தகவல் செல்ல, அவர்கள் இதுபற்றி விசாரித்தனர். விசாரணையின் போது உயிரிழந்த ருக்மணியின் மகள் இந்துலேகா, முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்.
தொடர் விசாரணையில் இந்து லேகா, தன் தாய் ருக்மணி இருக்கும் வீட்டையும், அதனோடு கூடிய 14 செண்ட் இடத்தையும் தன் பெயரில் மாற்றிக்கேட்டது தெரியவந்தது. தொடர்ந்து அதை வலியுறுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருந்து இந்துலேகாவின் கணவரும் திரும்பியுள்ளார். எங்கே தான் எட்டு லட்ச ரூபாய்க்கு நகைகளை அடகுவைத்தது தெரிந்துவிடுமோ என்னும் அச்சத்தில் தாயைக் கொலை செய்திருக்கிறார். அதாவது இதன்மூலம் சொத்து விரைவாகக் கிடைக்கும். தன் கணவரை திசை திருப்பிவிடலாம். அல்லது தன் அம்மாவின் மருத்துவச் சிகிச்சைக்கே பெரும் பணம் செலவு செய்துவிட்டதாக நம்பவைக்கலாம் எனவும் யூகித்தார்.
போலீஸார் இந்துலேகாவின் செல்போனை ஆய்வு செய்தபோது கூகுள் தேடலில் மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி? மெதுவாக கொல்வது எப்படி என்றெல்லாம் அவர் கூகுளில் தேடியதும் தெரியவந்தது. தாய் ருக்மணி, தந்தை சந்திரன் இருவருக்குமே டீயில் விஷம் கொடுத்தும், சாப்பாட்டில் சில மாத்திரைகள் கலந்தும் கொடுத்துவந்துள்ளார். இதில் தந்தை சந்திரன் டீயைக் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
பெற்ற தாயைத் துளியும் இரக்கமின்றி கொன்ற மகள் இந்துலேகாவை போலீஸார் கைது செய்தனர்.