‘ஆறிப்போன டீ தருகிறாயே?’ -மருமகளை உரிமையோடு கேட்டதில் உயிரை பறிகொடுத்த மாமியார்!

சித்தரிப்புக்கானது
சித்தரிப்புக்கானது

புதுக்கோட்டை மாவட்டத்தில் டீ ஆறிப்போன விவகாரத்தில், மாமியாரைக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மலைகுடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மனைவி பழனியம்மாள். இவரது மருமகள் கனகு. இந்த மாமியார் - மருமகள் இடையே பல்வேறு விஷயங்களை முன்வைத்து அடிக்கடி சச்சரவு மூண்டிருக்கிறது. அண்மையிலும் அதே போன்று புது மோதல் முளைத்தது.

இதில், மாமியார் பழனியம்மாளுக்காக மருமகள் கனகு தயாரித்த டீ, வேண்டுமென்றே தாமதமாக தரப்பட்டதாம். இதனால் டீ ஆறிப்போயிருக்கிறது. உள்நோக்கத்துடன் மருமகள் நடந்துகொண்டதாக குறைபட்ட மாமியார் பழனி, வழக்கம்போல் முடிவுக்கு வராத முந்தைய சச்சரவுகளை இழுத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார். பழனியம்மாளின் வேகத்துக்கு பதில் பேசுவதில் ஈடுகொடுக்க முடியாது கனகு தவித்தாராம்.

ஒரு கட்டத்தில் பேச்சு பொறுக்காதவராக, வீட்டிலிருந்த இரும்பு பைப் ஒன்றை எடுத்து மாமியார் தலையில் வீசியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் மயங்கி விழுந்திருக்கிறார். பயந்துபோன கனகு தகவல் தெரிவித்ததில், உறவினர்கள் திரண்டு வந்து பழனியம்மாளை விராலிமலை மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமானதில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக செத்துப்போனார்.

மாமியாரை அடித்துக்கொன்றதான வழக்கில், இலுப்பூர் போலீஸார் மருமகள் கனகுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in