குளிக்கச் சென்ற மகள்; அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் : வாட்டர் ஹீட்டரால் பறிபோன உயிர்கள்!

குளிக்கச் சென்ற மகள்; அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் : வாட்டர் ஹீட்டரால் பறிபோன உயிர்கள்!

வாட்டர் ஹீட்டரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம், துடியலூர், மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கிருத்திகா(52) என்ற மனைவியும், அர்ச்சனா(18) என்ற மகளும் உள்ளனர். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், அச்சனா பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அர்ச்சனா கல்லூரிக்குக் கிளம்புவதற்காகக் குளிக்க, குளியல் அறைக்குச் சென்றுள்ளார். தண்ணீரைச் சூடு செய்ய ஹீட்டர் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் அலறி துடிக்கவே, சத்தம் கேட்டு ஓடி வந்த கிருத்திகா, அர்ச்சனாவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அர்ச்சனாவை ஏற்றிச்செல்ல வந்திருந்த கல்லூரி பேருந்தின் ஓட்டுநர், அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து துடியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், மகள் என இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in