தரவுப் பாதுகாப்பா, அரசுக்குக் கூடுதல் அதிகாரமா?

தரவுப் பாதுகாப்பா, அரசுக்குக் கூடுதல் அதிகாரமா?

நவ.29-ல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, புயலைக் கிளப்பவிருக்கும் பல்வேறு விவகாரங்களில் தரவுப் பாதுகாப்பு மசோதாவும் ஒன்றாக இருக்கப்போகிறது. அத்தனைச் சிக்கல்களும் கேள்விகளும் இதில் இருக்கின்றன.

இந்த மசோதா குறித்த இறுதி அறிக்கையை நவ.22-ல் நாடாளுமன்றக் கூட்டுக்குழு சமர்ப்பித்திருக்கும் நிலையில், இதுதொடர்பான விவாதங்கள் பெரிய அளவில் எழுந்திருக்கின்றன. இந்தியாவில் இணையச் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்திருக்கும் சூழலில், அரசின் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

எங்கு தொடங்கியது?

ஆதார் திட்டம் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து 2012-ல், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குதான் இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி. பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த வழக்கு விசாரணையில், 2017-ல் 9 பேர் கொண்ட அமர்வு, தனிநபர் உரிமை ஓர் அடிப்படை உரிமை எனத் தீர்ப்பளித்தது. அத்துடன், தரவுப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதன் பின்னர் தொடங்கிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 டிசம்பரில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கும் அனுப்பப்பட்டது. 30 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்த மீனாட்சி லேகி, மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, பாஜக எம்பி, பி.பி.சவுத்ரி இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கடந்த 4 மாதங்களாக இக்குழு இயங்கிவந்தது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறது.

இந்தப் பரிந்துரைகள் மேலோட்டமாக இருப்பது, தரவுச் சேகரிப்பில் அரசு நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் என விமர்சிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்த மசோதா குறித்து நிலவிவந்த சந்தேகங்களை இக்குழுவின் அறிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.

என்ன சொல்கிறது மசோதா?

இந்த மசோதா சட்டவடிவம் பெற்று அமலுக்கு வந்தால், தனியார் நிறுவனங்கள், பயனாளர்களின் தரவுகளைச் சேகரிக்க அவர்களிடம் ஒப்புதல்பெற வேண்டும். இதுதொடர்பாகத் தாங்கள் வழங்கிய ஒப்புதலைத் திரும்பப் பெறவும், தங்கள் தரவுகளைத் திருத்தவும், அழிக்கவும் பயனாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

பயனாளர்களின் தகவல் சேகரிப்பு விஷயத்தில், உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமூக வலைதளங்கள் முதல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும். விதிமீறலில் ஈடுபடும் நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அல்லது அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 4 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அரசின் சார்பில் தரவுப் பாதுகாப்பு அமைப்பு இவை அனைத்தையும் கண்காணிக்கும்.

பயனாளரின் ஒப்புதல் இல்லாமல், அவரது பான் எண், ஆதார் எண் உள்ளிட்ட சுய விவரங்களை நிறுவனங்கள் சேகரிக்க முடியாது. பயனர்களின் மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகளை இந்தியாவுக்கு வெளியில் கொண்டுசெல்லக்கூடாது. இதுபோன்ற அம்சங்கள் இம்மசோதா குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் அரசு நிறுவனங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் இங்குப் பிரச்சினை. குறிப்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு அதிக அதிகாரம் கையளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் 7 பேர், இந்த மசோதா குறித்து பல்வேறு எதிர்க்கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, கவுரவ் கோகய், விவேக் தங்கா, திரிணமூல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன், மஹுவா மொய்த்ரா, பிஜூ ஜனதா தளத்தின் அமர் பட்னாயக் ஆகியோரின் எதிர்க்கருத்துகளுடனேயே இந்த மசோதாவின் அறிக்கையைக் கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கருத்துகளை முன்வைத்தாலும் இக்குழு ஜனநாயக முறையில் இயங்கியதாகப் பாராட்டத் தவறவில்லை. எனினும், இந்தக் குழு சரியான முறையில் இயங்கவில்லை என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். இந்த மசோதா ‘ஆர்வெல்லியன்’ (Orwellian) தன்மை கொண்டது எனத் திரிணமூல் எம்பிக்கள் இருவரும் விமர்சித்திருக்கின்றனர் (அரசுகளின் அதிதீவிரக் கட்டுப்பாடுகளைச் சித்தரிக்கும் வகையில், ‘1984’ உள்ளிட்ட தனது படைப்புகளில் பிரிட்டன் நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது). உண்மையில், இந்த மசோதா தொடர்பாக ஏற்கெனவே இதே பதத்தை இன்னொருவர் பயன்படுத்தியிருக்கிறார். அவர் இந்த மசோதாவுக்கான வரைவை உருவாக்கிய முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாதான்.

இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள், அவர் இப்படித் தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இவ்விஷயத்தில் அரசு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் எச்சரித்தார்.“நாங்கள் அளித்த வரைவின் தொடர்ச்சியாக இந்த மசோதா அமையவில்லை” என்றும் விமர்சித்தார்.

அசாதாரணத் தருணங்களில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் தனிநபர் தரவுகளை அரசு கையாள வேண்டும் என்கிற அளவில்தான் ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைத்தது.

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி ஆகியவற்றின் நலன் கருதி, கண்காணிப்பு, தரவுச் சேகரிப்பு குறித்த அனைத்து அம்சங்களிலிருந்தும் அரசு நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இந்த மசோதாவின் 35-வது பிரிவு கூறியிருப்பது இதன் நோக்கத்தையே வீணடிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மசோதா முதன்முதலாகக் கொண்டுவரப்பட்டபோது, ‘தேசப் பாதுகாப்பின் நலன் கருதி’ எனும் வாசகம் மட்டும்தான் இருந்தது. இந்நிலையில், மேலும் சில தளர்வுகளை இந்த அறிக்கை கொண்டிருப்பது, தனிமனித உரிமை ஆர்வலர்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக வலைதளங்களின் சரிபார்க்கப்படாத கணக்குகளிலிருந்து வரும் பதிவுகளுக்கு, அந்தந்த சமூக வலைதளங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

ஒரு தனிநபர் குறித்த தரவுகள் 3-வது நபரின் வசம் சென்றுவிட்டதாகத் தகவல் தெரியவந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைக்கிறது. சமூக வலைதளங்களைப் பதிப்பாளர்களாகக் கருத வேண்டும் என்றும் அதில் பதிவாகும் தகவல்களுக்கு அவை பொறுப்பேற்க வேண்டும் என்றும் இக்குழு தெரிவித்திருக்கிறது. சமூக வலைதளங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. எனவே, இந்தியாவில் இயங்கும் சமூக வலைதளங்கள் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டியிருக்கும். இதில் சாதகமான அம்சங்கள் இருந்தாலும், கருத்துச் சுதந்திரம் பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது.

திசைமாறியதா நோக்கம்?

அடிப்படையில், தனிமனிதர்களின் சுய விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. வணிக நிறுவனங்கள் இந்த விவரங்களை, பயனர்களின் ஒப்புதல் பெறாமல் தங்கள் வணிக நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் என்பதே முக்கியமான விமர்சனம். கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் காரணம் காட்டிப் பல்வேறு வகைகளில் அரசின் மறைமுகத் தலையீடு அதிகரித்திருப்பதாக, இணைய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், இதுபோன்ற அதிகாரபூர்வ அழுத்தங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்!

அசாதாரணத் தருணங்களில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் தனிநபர் தரவுகளை அரசு கையாள வேண்டும் என்கிற அளவில்தான் ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைத்தது. ஆனால், தரவுகளை எந்நேரத்திலும் அரசு கையாளலாம் என மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, இவ்விஷயத்தில் அரசின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். தரவுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் எனும் பரிந்துரைக்கு மாறாக, அரசே சுயமாக நியமனங்களைச் செய்ய முடியும் என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கூடுதல் அதிகாரம் என்ன செய்யும்?

தகவல் உரிமைச்சட்டம் மாநில அளவிலும் செயல்படுத்தப்படுவதுபோல இந்தச் சட்டம் இல்லை என்றும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு அமைப்பின் கைகளில் இருக்கும் என்றும் பிஜு ஜனதா தள எம்பி அமர் பட்னாயக் போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள். மத்திய அரசோ மாநில அரசோ, எல்லா அதிகாரமும் அதிகாரவர்க்கத்தின் கைகளில் இருந்தால் தனிமனிதச் சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே இங்கு விவாதத்துக்குரிய விஷயம்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை எனும் எல்லைக்கோடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் எல்லாவற்றையும் அரசே கைக்கொள்ளும் என்கிற சூழல் உருவாக்கப்படுவது அபாயகரமானது என்றே விமர்சிக்கப்படுகிறது.

கூட்டுக் குழுவின் சில உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் எதிர்க்கருத்துகளால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இம்மசோதாவில் மாற்றம் செய்யப்படுமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்து மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், கூட்டுக்குழுவில் இடம்பெறாத பிற எதிர்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது முக்கியமான கேள்வி. மொத்தத்தில் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட விவகாரம், கிரிப்டோ கரன்ஸி தடைச் சட்டம் எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவிருக்கும் நிலையில், தரவுப் பாதுகாப்பு மசோதா குறித்த விவாதங்களாலும் குளிர்காலக் கூட்டத்தொடரில் அனல் வீசுவது மட்டும் நிச்சயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in