ஆவின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மூடப்படும் பால்பண்ணை: அதிர்ச்சியூட்டும் பால்முகவர்கள் சங்கம்!

ஆவின் பால்பண்ணை
ஆவின் பால்பண்ணைஆவின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் மூடப்படும் பால்பண்ணை: அதிர்ச்சியூட்டும் பால்முகவர்கள் சங்கம்!

அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால்பண்ணை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி காலாவதியான நிலையில் அது புதுப்பிக்கப்படாமல் பால்பண்ணை செயல்பட்டு வந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என பால்முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த சங்கம், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளது. அந்த புகார் கடிதத்தில், ‘’ அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தியின் போது வீணாகும் பால், பால் சாந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே மழைநீர் வடிகால் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.

அது கொரட்டூர் ஏரியில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 2022 டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி காலாவதியான நிலையில் அது புதுப்பிக்கப்படாமல் பால் பண்ணை செயல்பட்டு வந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சுமார் 3லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் பொருட்கள்  உற்பத்திக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமே கொண்டிருக்கையில் அதன் அளவை விட ஒன்றரை மடங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது.

அதாவது நாளொன்றுக்கு சுமார் 4.45லட்சம் லிட்டராக பால் உற்பத்தி மட்டும் அதிகரித்திருக்கும் போது அதற்கான கூடுதல் சுத்திகரிப்பு வசதி செய்து, முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், பழைய லைசென்ஸைப் புதுப்பிக்காமலும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை செயல்பட்டுள்ளது.

அதனால் கூடுதல் கழிவுகளால் பால் பண்ணையில் ஏற்கெனவே உள்ள உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயலற்று, பயனற்றதாகிப் போனதாகவும், அதனாலேயே அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகால் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு, கொரட்டூர் ஏரியில் கலந்து நீர் நிலைகளை மாசுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

பால் மற்றும் பால் பொருட்களின்  உற்பத்தியை மட்டும் அதிகப்படுத்தி தொடர்ந்து நீர் நிலைகளை மாசுபடுத்திய காரணத்தால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதன்மூலம் ஆவின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அவலநிலைக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் இருவருமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தற்போதைய பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கு ஏற்றவாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, முறையான சுற்றுச்சூழல் (Pollution Control Licenses) அனுமதி பெறுவதில் இருந்து கடமை தவறி செயல்பட்ட ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பதோடு, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்குத் தேவையான கூடுதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று பால் பண்ணை தங்குதடையின்றி செயல்பட்டு, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாவகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பத்தூர் பால் பண்ணை மட்டுமின்றி இணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பால் பண்ணைகளிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி ஒவ்வொரு பால் பண்ணைகளிலும் மாசு சுற்றுச் சூழல் லைசென்ஸ் உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அங்கு பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்திக்கேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், நீர் நிலைகளை மாசுபடுத்தாமல் ஆவின் பால் பண்ணையின் செயல்பாடுகள் அமைந்துள்ளதா என்பதையும் ஒருவார காலத்தில் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in