`கடன் இருக்கு, பின்னர் பைக் வாங்கித் தருகிறேன்'- தந்தையின் பதிலால் உயிரை மாய்த்துக் கொண்ட மகன்

`கடன் இருக்கு, பின்னர் பைக் வாங்கித் தருகிறேன்'- தந்தையின் பதிலால் உயிரை மாய்த்துக் கொண்ட மகன்

தன் தந்தையிடம் பைக் வாங்கிக் கேட்டு அவர் வாங்கித் தராததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லாறை கைதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் சஜின்(20). பிளஸ் டூ வரை படித்திருந்த சஜின் படிப்பு வராதக் காரணத்தால் வெல்டிங் வேலை செய்து வந்தார். செல்வன் இப்போதுதான் புதிதாக வீடு ஒன்றும் கட்டியுள்ளார். அதற்கே உறவினர்கள் பலரிடமும் கடனும் பெற்றுள்ளார். இந்நிலையில் சஜின் தனக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிக சிசி கொண்ட புது பைக் ஒன்று வாங்கிக் கேட்டுள்ளார். ஆனால் செல்வன் வீடுகட்டிய கடனே இருப்பதாகவும், சில மாதங்கள் கழித்து வாங்கித் தருகிறேன் எனவும் சொன்னார். ஆனால் சஜின் அதற்கு சம்மதிக்கவில்லை. பைக் வாங்கிக் கொடுக்காத மன வருத்தத்திலேயே இருந்துவந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு செல்வனும், அவரது மனைவி மற்றும் மூத்தமகன் ஆகியோர் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டில் படுக்கச் சென்றனர். ஆனால் சுஜின் பழைய வீட்டிலேயே தங்குவதாகச் சொல்லி தூங்கினார். இன்று காலையில் செல்வன் தன் மகனுக்கு காபி கொண்டு சென்றார். அப்போது அறையில் தூக்குப் போட்டு சுஜின் தற்கொலை செய்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். குலசேகரம் போலீஸார் சுஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புது பைக் வாங்கிக் கொடுக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in