
ஆவடியில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் தாய் உயிரிழந்தார். மகன், பேத்தி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கோயில் பதாகை கலைஞர் நகர் 15-வது தெருவை சேர்ந்தவர் ரோஜா. நேற்று இரவு சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்திருக்கிறார். அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ரோஜா, அவரது மகன் சங்கர்ராஜ், பேத்தி கிருத்திகா ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில், சரோஜா 80 சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா இன்று உயிரிழந்தார். மகனும், பேத்தியும் 30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு நாட்களுக்கு முன்பு ரோஜா வீட்டில் உள்ள சிலிண்டரில் இருந்தது கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சிலிண்டர் குழாயை அவர் மாற்றி இருக்கிறார். ஆனாலும் சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிலிண்டரை பற்ற வைக்க வேண்டாம் என்று தனது தாயிடம் சங்கர்ராஜ் கூறி இருந்திருக்கிறார். இதை கவனிக்காமல் ரோஜா சிலிண்டரை பற்ற வைத்தபோது வெடித்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழந்ததோடு, மகனும், பேத்தியும் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.