135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

மேற்கு வங்கத்தில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்  மீட்புக் குழுவினர்
மேற்கு வங்கத்தில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் மீட்புக் குழுவினர்

மேற்கு வங்கத்தில் 'ரெமல்' புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக அங்கு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் கடந்த 25ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. 'ரெமல்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், 'ரெமல்' புயல் நேற்று இரவு 8.30 மணியளவில் வங்கதேசத்தில் உள்ள கேப்புபாரா தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது.

இதன்காரணமாக கொல்கத்தா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. மரங்கள், மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.

தொடர்ந்து கன மழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விடியவிடிய தொடர்ந்து கனழை பெய்ததால் வீடுகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுந்தரவனத்தின் கோசாபா பகுதியில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் காயமடைந்தார். கொல்கத்தாவின் பீபிர் பாகன் பகுதியில், இடைவிடாத மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

ரெமல் புயல் பாதிப்பு
ரெமல் புயல் பாதிப்பு

புயல் எச்சரிக்கையை ஒட்டி, மேற்கு வங்க அரசு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை முன்கூட்டியே வெளியேற்றியது.

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் 'ரெமல்' புயலால் பரவலாக சேதம் ஏற்பட்டுள்ளது. திகா, காக்ட்விப், ஜெய்நகர் போன்ற பகுதிகளில் புயலால் இன்றும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் கொல்கத்தா மற்றும் தெற்கு வங்கத்தில் விமானம், ரயில், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in