வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்வதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அதே இடத்தில் நிலவியது. இது ஒடிசாவின் பாரதீப்பிற்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் டிகாவிற்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவியது.
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை 08.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஹாமூன் புயல் உருவானதையடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேசக் கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே நாளை (அக்.25) மாலை கரையைக் கடக்கக்கூடும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு