ஆயுதங்களுடன் இன்ஸ்டா இம்சைகள்; சர்ச்சை பக்கங்கள் படிப்படியாக முடக்க முடிவு!

இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றில் ரவுடி பேபி தமன்னா என்னும் வினோதினி
இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றில் ரவுடி பேபி தமன்னா என்னும் வினோதினி

ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் இம்சைகள் கூட்டுவோரை, கட்டம்கட்ட இன்ஸ்டாகிராம் நிர்வாகம் முன்வந்துள்ளது. கோவை சைபர் க்ரைம் போலீஸார் முன்னெடுப்பில் இந்த நன்மை கனிந்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் பல ரகம். அவற்றில் புதுவிதமாய் ஆயுதங்களுடன் இளந்தாரிகள் படையெடுப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவையில் பட்டாக் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ விரும்பிகள் அதிகரித்து வந்தனர். இவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியிலிருந்து போலீஸாருக்கு புகார்களும் குவிந்தன.

குறிப்பாக ரத்தினபுரி, கண்ணப்ப நகர், சரவணம்பட்டி, சிங்காநல்லூர், போத்தனூர், செல்வபுரம் பகுதியை சேர்ந்த சில ரவுடிகள் போட்டிபோட்டு ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டனர். ஆயுதங்களுடன் அடாவடியாக போஸ் கொடுப்பதும், எதிர் தரப்பை எகத்தாளம் செய்வதாய் பஞ்ச் டயாலாக்குகள் பேசுவதுமாக, இவர்கள் இளம் தலைமுறையினரை சீரழித்து வந்தனர்.

இவற்றின் மத்தியில் கோவை கோர்ட் அருகே கோகுல் என்பவர் பட்டா கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன் சரவணம்பட்டியில் குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். காட்டூரில் வாலிபர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு ஆதரவானவர்கள் என குழுவாக பிரிந்து, போட்டியிட்டு பழிவாங்கல் சபதங்களில், எகிடுதகிடு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

போலீஸார் நடவடிக்கை எடுத்த போதிலும் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவர்களின் அட்டகாசம் குறையவில்லை. சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடிபேபி தமன்னா, ரீல்ஸில் ஆயுதமேந்திய சர்ச்சையில் சிக்கினர். இந்த போக்கிற்கு முடிவுகட்ட, இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் போஸ் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோவை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், சைபர் கிரைம் போலீசார் சார்பில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு, ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட நபர்களின் பட்டியலை அனுப்பி, அந்த பக்கங்களை முடக்க அறிவுறுத்தினர். போலீஸாரின் இந்த முயற்சிக்கு இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. புகாருக்கு ஆளான இன்ஸ்டா பக்கங்களும் முடக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள, இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வாகம் செய்யும் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைக்க போலீஸார் முடிவு செய்தனர்.

இந்த தகவல் வெளியான நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவன நிர்வாகிகள், சர்ச்சைக்குரிய 25 இன்ஸ்டா பக்கங்களை நீக்கம் செய்யப்போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சர்ச்சைக்கும், ஆட்சேபனைக்கும் உரிய பதிவுகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தினர், கோவை சைபர் கிரைம் போலீஸாருக்கு உறுதி அளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in