கடவுளின் தேசத்தில் நடந்த கண்ணீர் கதை; துடிதுடித்து இறந்து விழும் பறவைகள்: வைரலாகும் மனதை உலுக்கும் வீடியோ

கடவுளின் தேசத்தில்  நடந்த கண்ணீர் கதை; துடிதுடித்து இறந்து விழும் பறவைகள்: வைரலாகும் மனதை உலுக்கும் வீடியோ

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் மரம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி சாய்க்கின்றனர். இதில் மரத்தில் இருந்த ஏராளமான பறவைகள் கீழே விழுந்து இறக்கவும், சில பறவைகள் கொடும் காயமும் அடைந்தன. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளம் ஏராளமான இயற்கை வளங்களையும், பல்லுயிர் பெருக்கத் தன்மையும் கொண்டது. அதனால்தான் கேரளத்தைக் கடவுளின் தேசம் என்கிறார்கள். ஆனால் இங்கே பறவைகளுக்கு ஏற்பட்ட அவல நிலை காண்போரைக் கவலைகொள்ளச் செய்து உள்ளது.

கேரளத்தின் மலப்புரம் பகுதியில் மரம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி வீழ்த்துவதை வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில், "நம் அனைவருக்கும் வீடு வேண்டும். ஆனால், அதற்காக நாம் இவ்வளவு கொடூரமானவர்களாக மாறவேண்டுமா?" என்னும் பதிவையும் எழுதியிருந்தார். ஒரு நிமிடத்திற்கும் குறைவான அந்த வீடியோவை நேற்று வெளியிட்ட நாளிலேயே பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். அது சமூக வலைதளங்களில் வைரலும் ஆனது.

அதில் கம்பீரமாக நிற்கும் மரத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டுகிறார். நொடிகளில் விழும் மரத்தின் அசைவில் சில பறவைகள் பறந்து தப்பிக்கின்றன. பல பறவைகள் கீழே விழுந்து மரத்தின் கிளைகளில் சிக்கி உயிர் இழக்கின்றன. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 விரிவாக்கப் பணிகளுக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பணிதான் அது என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறையினர் காட்டுயுர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலேயே மரத்தை வெட்டிய ஜேசிபி டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in