கோயில்களுக்கு வந்த பெண்களுக்கு 'சேப்டி பின்': நகைகளைப் பாதுகாக்க கடலூர் போலீஸின் கலக்கல் திட்டம்

கோயில்களுக்கு வந்த பெண்களுக்கு 'சேப்டி பின்': நகைகளைப் பாதுகாக்க கடலூர் போலீஸின் கலக்கல் திட்டம்

கடலூர் மாவட்டத்தில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி முக்கியமான பல  கோயில்களில் நடைபெற்றபோதும் எந்த கோயிலிலும் பெண்களின் நகைகள்  திருடு போகாமல் மிக்கவனமாக பார்த்துக் கொள்வதில் காவல்துறை அதிக கவனம் செலுத்தியது  பாராட்டைப் பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசாமி திருக்கோயில், திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயில்கள்  உள்ளன.  அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று  சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு  பெருமாளை  தரிசனம் செய்து வழிபட்டனர்.

கோயிலுக்கு வரும் பெண்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளைத் திருடும் கும்பல் இங்கே எல்லாம் தங்கள் கைவரிசையைக் காட்டும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பெண் போலீஸாரை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பெண்களின் நகைகளைப் பாதுகாக்க ஒரு திட்டத்தையும் செயல்படுத்தினர்.

அவரது திட்டத்தின்படி கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த  பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள்  சொர்க்கவாசல் திறப்பைக் காண வந்த பெண் பக்தர்களின் நகைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களின் நகைகளை அவர்கள் அணிந்திருக்கும் ஆடையோடு சேர்த்து ஊக்கு (Satety Pin) அணிவித்தனர். அத்துடன் சந்தேகத்துக்குரியவர்கள் தென்பட்டால் அவர்களைத்  தீவிரமாக கண்காணித்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சங்கிலி பறிப்பு உள்ளிட்ட  குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பாதுகாக்கப்பட்டதால் மாவட்ட காவல் துறைக்கு பலரும்  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in