
கடலூர் சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேற்று ஆஜர் படுத்த எண்ணூர் தனசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.
இன்று அதிகாலையில் 30 பி.பி மாத்திரைகள், 2 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் மயங்கி கிடந்த அவரை போலீஸார் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு தனசேகரன் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரவுடி தனசேகரன் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் , சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென அம்ரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.