
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வென்றவர்களில் பெரும்பாலானோர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சட்டப்பேரவையோ மக்களவையோ அல்லது உள்ளாட்சியோ.. தேர்தல் எதுவென்றாலும், வேட்பாளருக்கான வாக்கு வங்கியைவிட அதிகமாக வங்கி இருப்பு குறித்தே பரிசீலிக்கப்படுகின்றன. பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்கள் ஆவதும், அப்படி வென்ற பிறகு மேலும் அவர்கள் பணம் சேர்ப்பதும் தேர்தல் விநோதங்களில் ஒன்று.
அண்மையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. அந்த வகையில் கூடும் சகல கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். வேட்பாளர்களின் மனுத்தாக்கல் விபரங்களின் அடிப்படையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்களில் 38 பேர் கோடீஸ்வரர்கள். பாஜகவின் 25 எம்எல்ஏக்களில் 22 பேர் கோடீஸ்வரர்கள். பெரும் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மட்டுமல்ல; தேர்வான சுயேட்சைகள் 3 பேரும்கூட கோடீஸ்வரர்களே!
2017 தேர்தல் முடிவுகளை தொடர்ந்து கூடிய சட்டப்பேரவையில் 52 கோடீஸ்வரர்கள் வீற்றிருந்தனர். தற்போதைய சட்டப்பேரவையில் அது 63 என்பதாக உயர்ந்திருக்கிறது. ஒரு சோற்றுப் பதமாக இது, இமாச்சல் பிரதேசத்தின் கணக்கு. இதர மாநிலங்களிலும் இந்த கோடீஸ்வர நிலவரமே பெரும்பாலும் தென்படும் என்பது கண்கூடு!