2 வருடமாக ஸ்கெட்ச் போட்டார்; கணவரை கொன்றவரை பழிதீர்த்த மனைவி: வக்கீல் கொலையில் அதிர்ச்சி தகவல்

படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் சாமிநாதன்
படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் சாமிநாதன்

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? கொலை செய்தவர்கள் யார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நாச்சியார் கோயிலை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சாமிநாதன்(37). இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது தங்கை தையல்நாயகிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 7-ம் தேதி காலை திருமணம் நடைபெற்றது.

தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்திய சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம், திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோயில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார், ஆகியோர் திருவையாறு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

இதற்கிடையில் போலீஸாரின் விசாரணையில் சாமிநாதன் கொலைக்கான பின்னணி குறித்து விவரம் தெரியவந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயில் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மதுபான கூடத்தில் சாமிநாதன் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது அருகில் இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வமணி என்பவரை வெட்டி கொலை செய்தனர்.

இதற்கு செல்வமணியின் தரப்பில் பழிக்குப் பழி வாங்க, காலம் பார்த்து காத்திருந்தனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சாமிநாதன், இதனால் சொந்த கிராமத்துக்கு வராமல் சென்னையிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தனது தங்கையின் திருமணத்திற்காக அரியலூர் மாவட்டம், அணைக்குடம் கிராமத்துக்கு வந்துள்ளார்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொலை செய்யப்பட்ட செல்வமணியின் தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலர் கூலிப்படையை வைத்து சாமிநாதனை வெட்டி படுகொலை செய்தனர். மேலும் போலீஸாரின் தொடர் விசாரணையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவின் மனைவி ரெஜினா, கும்பகோணம் சோமசுந்தரம் மகன் செல்வகுமார்(41), திருநறையூர் தட்சணாமூர்த்தி மகன் செல்வம்(45), திருநறையூர் மோகன்தாஸ் நவீனகுமார்(26) ஆகிய நான்கு பேர் சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது மற்றும் சாமிநாதன் யார் என அவரை அடையாளம் காட்டியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாமிநாதன் செய்த கொலைக்கு பழிவாங்கவே அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் பதற்றம் தணிந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in