தேர்வு தேதியை மாற்ற எஸ்பிஐ மறுப்பு; நள்ளிரவில் திடீர் போராட்டம்: நடந்தது என்ன?

தேர்வு தேதியை மாற்ற எஸ்பிஐ மறுப்பு; நள்ளிரவில் திடீர் போராட்டம்: நடந்தது என்ன?

பொங்கல் பண்டிகை நாளில் நடத்தப்பட உள்ள எஸ்பிஐ வங்கியின்  தேர்வுத்தேதியை மாற்றக் கோரி மயிலாடுதுறையில் நள்ளிரவு 12 மணிக்கு திடீர் போராட்டம் நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை  15-ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வை தமிழ்நாட்டில் 13,000 பேர் எழுதுகின்றனர். தமிழர்களின் திருநாளை மதிக்காமல் ஸ்டேட் வங்கி தேர்வை  பொங்கல் அன்று  நடத்த திட்டமிட்ட மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

மத்திய மோடி அரசைக் கண்டித்தும், தேர்வு தேதியை வேறு நாளுக்கு மாற்றக்கோரியும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு வரை போராட்டம் நடந்து வந்தது. எம்பிக்கள் தொல் திருமாவளவன் தமிழச்சி தங்கபாண்டியன்,  செல்லக்குமார் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று  அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தேர்வு தேதியை வேறு நாளுக்கு மாற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று இரவு 11 மணி அளவில் மயிலாடுதுறை தலைமை  தபால்  அலுவலகம் எதிரில் திடீர் போராட்டம் நடைபெற்றது.  நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு திரண்ட 50க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து சுமார் இரண்டு மணி நேரம்  முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "எஸ்பிஐ முதன்மை தேர்வுகளை தமிழர் திருநாளில் நடத்தக்கூடாதென 12 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு ஒன்றிய நிதியமைச்சரோடு பேசியுள்ளார். நிர்மலா சீதாராமனுடன் நாளை காலை தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முடிவை எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in