சிவகங்கை மாவட்டம், கல்லலில் பாலியல் புகாரில் மிரட்டி பேக்கரி உரிமையாளரிடம் இருந்து 50 லட்சம் அபகரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கல்லலை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் மீது அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அச்சிறுமியின் உறவினர் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில் சிறுமி பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நாச்சியப்பனிடம் பேரம் பேசிய கல்லல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் குணாளன், அவரிடம் இருந்து 50 லட்சத்தை அபகரித்ததுடன், நாச்சியப்பனின் வீடு மற்றும் பேக்கரியையும் அபகரிக்க முயன்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயார், தனது மகள் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பன் மனைவி சகுந்தலாதேவியும், தனது கணவர் மீது பாலியல் புகார் சுமத்தி 50 லட்சம் அபகரித்து கொண்டு மிரட்டியதால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த இரு வழக்குகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து டி.எஸ்.பி பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் தலைமையில் விசாரணை நடத்தியதில் பொய்யான புகாரில் மிரட்டி நாச்சியப்பனிடம் இருந்து குணாளன் பணம் அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து நாச்சியப்பன் மற்றும் தேவகோட்டையை சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
பொய்யான பாலியல் புகாரில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணத்தை அபகரித்ததுடன், அவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் செயல் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.