கோவிஷீல்டு, கோவாக்ஸின் பூஸ்டர் டோஸ்: சொன்னதைவிட குறைவான கட்டணம்!

கோவிஷீல்டு, கோவாக்ஸின் பூஸ்டர் டோஸ்: சொன்னதைவிட குறைவான கட்டணம்!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை நேற்று அறிவித்திருந்தது. 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்கள் இலவசமாகப் போடப்படும் என்றும் மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா, தனியார் மருத்துவ மையங்களில் செலுத்தப்படும் கோவிஷீல்டு பூஸ்டர் டோஸுக்கு 600 ரூபாய் (வரிகள் தனி) கட்டணம் எனத் தெரிவித்திருந்தார். கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிகளை வாங்கும் மருத்துவமனைகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரிய அளவில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிக்கான கட்டணம் 225 ரூபாய் என அவர் அறிவித்திருக்கிறார். அதேபோல், கோவாக்ஸின் தடுப்பூசிக்கான கட்டணம் 1,200 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் விலையும் 225 ரூபாயாகியிருக்கிறது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தாலும், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்நாடுகளுக்குச் செல்வதில் இந்தியர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.