முகக்கவசத்துக்கு முடிவுரை எழுதும் மகாராஷ்டிரம்!

கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
முகக்கவசத்துக்கு முடிவுரை எழுதும் மகாராஷ்டிரம்!

வரும் சனிக்கிழமை முதல், கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடவிருக்கிறார்கள் மகாராஷ்டிர மாநில மக்கள். முகக்கவசம் பயன்படுத்துவது நல்லதுதான்; எனினும், அதுவும் கட்டாயம் இல்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துவிட்டார். இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொற்றுகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்திருக்கும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை ஆலோசித்துவந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

“குடி பட்வா புத்தாண்டை ஒட்டி மகாராஷ்டிரத்தில் அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன” என உற்சாகத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் உத்தவ் தாக்கரே. மராத்தியர்கள், கொங்கணி மொழி பேசுபவர்கள் குடி பட்வா புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகள் கரோனா கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தியிருக்கின்றன. தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களைச் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதால் துணிச்சலாக இம்முடிவை அந்நாடுகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரம் அதிகாரபூர்வமாகக் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in