கரோனா பிஎப்.7 வைரஸ் குறைந்த வீரியத்துடன் பரவக்கூடியது: கர்நாடக சுகாதார அமைச்சர்

கரோனா பிஎப்.7 வைரஸ் குறைந்த வீரியத்துடன் பரவக்கூடியது: கர்நாடக சுகாதார அமைச்சர்

கரோனாவின் பிஎப்.7 வைரஸ் குறைந்த வீரியத்துடன் பரவக்கூடியது என்று கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். ஆனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான தயார்நிலையைச் சரிபார்ப்பதற்கு, ஒத்திகைப் பயிற்சிகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் நடத்தப்பட்டன என்று கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுதாகர், "பிஎப்.7 என்பது ஒமைக்ரானின் துணை வேறுபாடு ஆகும். ஆனால் மற்ற வகைகளுக்கும் இதற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், இதன் பரவல் விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால் அதிக வீரியம் இல்லை.

எவ்வாறாயினும், பிற நாடுகளின் அறிக்கைகள் மூலமாக வயதானவர்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் உள்ளவர்களிடையே வைரஸ் சற்று அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இதுதான் காரணம், நாங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். மேலும் அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை அவர்கள் தவிர்க்கவும், தவிர்க்க முடியாவிட்டால் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியுள்ளோம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதே அறிவுறுத்தல்தான்" என்று கூறினார்.

உலகளவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட கர்நாடக அரசு, சினிமா தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியது. மேலும், பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்குச் செல்ல இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. அதுபோல மேற்கண்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இருக்கை திறன் வரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in