5.2 கோடி செலுத்தவும், இல்லையென்றால் சொத்து முடக்கம்: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு அதிரடி உத்தரவு

5.2 கோடி செலுத்தவும், இல்லையென்றால் சொத்து முடக்கம்: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு அதிரடி உத்தரவு

கேரளத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய போராட்டத்தில் ஏராளமான அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் அரசுத்தரப்பில் 5.2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இந்தப் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நிர்வாகிகளின் சொத்துகள் முடக்கப்படும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கியத் தலைவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கேரளம் உள்பட 11 மாநிலங்களில் பாப்புலர்ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். 

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் கடந்த 23-ம் தேதி, 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் கேரளத்தில் அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகளும், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகன சேவைகளும் வழக்கம்போல் இயங்கின. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது நடவடிக்கைக்கு எதிராக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. 

கேரளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினர். வழியில் இருந்த கடைகளின் ஷெட்டர்களை கட்டாயப்படுத்தி அடைத்தனர். கண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரிகளின் சாவியை போராட்டக்காரர்கள் எடுத்துக்கொண்டதால் அந்த பகுதி முழுவதும்  போக்குவரத்து நெருக்கடியில் தவித்தது.  பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு வலுவான அடித்தளம் இருக்கும் மளப்புரம், வயநாடு, கண்ணூர், பாலக்காடு, திருவனந்தபுரம் பகுதிகளில் 30க்கும் அதிகமான  அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பேருந்தின் முன், பின்பக்கக் கண்ணாடிகள் நொறுங்கின. 

கோழிக்கோடுபகுதியில் நடந்த கல்வீச்சில் 15 வயது சிறுமியும், கண்ணூரில் நடந்த கல்வீச்சில் ஆட்டோ ஓட்டுநரும் காயம் அடைந்தனர்.  கோட்டயத்தில் திறந்திருந்த லாட்டரி கடை ஒன்று போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது கோழிக்கோடு பகுதியில் கல்வீசி தாக்குதல் நடந்தது. இதில் தமிழக லாரி ஓட்டுநர் காயம் அடைந்தார். மாநிலம் முழுவதிலும் அரசுப்பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்படும் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் ஆலுவா பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினார். இந்தக் காட்சிகளும் போராட்டப் பரபரப்புகளுக்கு நடுவே இணையத்தில் வைரல் ஆனது. 

கோட்டயம் மாவட்டம், எரட்டுப்பேட்டை பகுதியில் கடைகளை அடைக்கக்கோரி கட்டாயப்படுத்திய போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். கொல்லம் பள்ளிமுக்கு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய போராட்டக்காரர் ஒருவரை போலீஸார் தட்டிக்கேட்டனர். இதில் அந்த போலீஸ்காரரைத் தாக்கிவிட்டு  போராட்டக்காரர் தப்பியோடினார். 

தாமாக முன்வந்து வழக்கு

பொது அடைப்புப் போராட்டத்திற்கு ஏழு நாள்கள் அவகாசம் கொடுத்தே நடத்த  வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுட்டிக் காட்டியிருந்தது. இது கேரளத்தில் நடைமுறையில் உள்ளது.  ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மறுநாளே  போராட்டத்தில் ஈடுபட்டதை கேரள உயர்நீதிமன்றம் கண்டித்து, தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் மீதும் நீதிமன்றம் வழக்குப் பதிந்து இருந்தது. இந்நிலையில் மாநில அரசு, கேரளத்தில் வன்முறையில் ஈடுபட்ட 2000க்கும் அதிகமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள், ஆதரவாளர்களைக் கைது செய்தது. இவர்கள் மீது 350க்கும் அதிகமான வழக்குகளும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்துவரும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுச்சொத்துக்கு ஏற்பட்ட இழப்பிற்கு, போராட்டத்தை அறிவித்த அமைப்பிடம் இருந்தே இழப்பீடு பெற உத்தரவிட்டது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தால் 5.2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அரசு அறிக்கைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘இந்தத் தொகையை அடுத்த இருவார காலத்திற்குள் உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்பிக்க வேண்டும். அப்படி செலுத்தாதபட்சத்தில் வருவாய் மீட்பு சட்டத்தின்படி, நிர்வாகிகளின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும்” எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in