
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த 24 வயது இளைஞரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது, இதை ஒருமித்த உறவு வழக்கு என்று சிறப்பு நீதிபதி வி.வி.விர்கார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் துல்ஜாபூரில் தனது பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 2014ம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் தேடிக் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி தனது உத்தரவில், இது ஒருமித்த உறவின் வழக்காகத் தெரிகிறது "மருத்துவ அதிகாரிக்கு வழக்குரைஞர் வழங்கிய அறிக்கையிலிருந்தும் இது தெளிவாகத் தெரிகிறது" என்றார். மேலும், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது நிரூபிக்கப்படாததால், அந்த நபர் மீது கடத்தல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதியின் உத்தரவில், "இது ஒருமித்த உறவாக இருக்கும்போது, சம்பவத்தின் போது அந்தப் பெண்ணுக்கு 17 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் என்று கருதப்பட்டாலும், அது புரிந்துகொள்ளும் மற்றும் விவேகமான வயதுதான். மேலும் அந்தப் பெண் மேஜராகும் விளிம்பில் இருப்பதால், அவருடன் உடலுறவு கொள்ளும் செயலை பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது" என்று தெரிவித்து குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.