
மதுரை சோழவந்தானில் பூட்டிய வீட்டில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி, (50). கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் டிரைவராக பணியாற்றினார். இவரது மனைவி தீபா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், சென்னையில் வசிக்கும் இவர்களது மகன் இன்று மதியம் போன் செய்துள்ளார். ஆனால், அந்த அழைப்பை யாரும் ஏற்காததால், பக்கத்து வீட்டாரிடம் போன் செய்து வீட்டில் பெற்றோரை பார்க்கச் சொன்னார். இதன்படி அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கையறையில் கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி இருவரின் உடல்களை சோழவந்தான் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். தம்பதியர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.