'அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுகிறார்'; போலீஸார் காலில் விழுந்து கதறிய தம்பதி: கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு

'அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுகிறார்'; போலீஸார் காலில் விழுந்து கதறிய தம்பதி: கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு

அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் உள்ளிட்டோர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதிக்கப்பட்ட தம்பதியினர் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது காவல்துறையினர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது மன்னவராதி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தெய்வமுருகன்-மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. தெய்வமுருகனுக்கு சொந்தமாக மன்னவராதியில் உள்ள வீட்டின் முன்பு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை அதிமுகவைச் சேர்ந்த நிலக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் மூர்த்தி, இவரது மாமனார் வேலாயுதம், அவரது மகன் பாண்டியராஜன் ஆகியோர் சேர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஆழ்துளைக்கிணறு அமைத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், அந்த இடத்தில் வீடு கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினால் தெய்வமுருகன் வீட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாமல் போய்விடும். இது குறித்து, பாதிக்கப்பட்ட தெய்வமுருகன் நிலக்கோட்டை தாசில்தார் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அதிமுக முன்னாள் சேர்மன் மூர்த்தி தெய்வமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட தெய்வ முருகன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். தங்களைக் கொலை செய்து விடுவதாக மிரட்டும் மூர்த்தி மீது புகார் அளித்தும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே, தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருகை தந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் காலில் தெய்வ முருகன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட தம்பதிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த சம்பவத்தால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in