ஒருவாரத்திற்கு முன்பு திருமணம்; 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை: கேரளாவில் நடந்தது என்ன?

தற்கொலை செய்த ஸ்ரீஜா, ஷாஜி.
தற்கொலை செய்த ஸ்ரீஜா, ஷாஜி.ஒருவாரத்திற்கு முன்பு திருமணம்; 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை: கேரளாவில் நடந்தது என்ன?

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர், மூன்று குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா(35). இவருக்கு ஏற்கெனவே சுனில் என்பவருடன் திருமணமாகி சுராஜ் (12), சுஜின் (10) என்ற இரு மகன்களும், சுரபி (8) என்ற மகளும் உள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட இவர், கடந்த 16-ம் தேதி ஷாஜி(40) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஷாஜிக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் ஸ்ரீஜாவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஸ்ரீஜாவும் முறையான விவாகரத்து பெறவில்லை.

இந்த நிலையில், செருபுழா காவல் நிலையத்திற்கு ஸ்ரீஜா நேற்று போன் செய்துள்ளார்." இன்று நீங்கள் என்னை விசாரணைக்கு அழைத்துள்ளீர்கள், ஆனால், நான் வரமாட்டேன். என் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இதனால் அலறியடித்துக் கொண்டு போலீஸார், ஸ்ரீஜா வீட்டிற்குப் போன போது அது பூட்டிக் கிடந்தது.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடுஒருவாரத்திற்கு முன்பு திருமணம்; 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை: கேரளாவில் நடந்தது என்ன?

இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷாஜி, ஸ்ரீஜா, அவரது மூன்று குழந்தைகளும் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தனர். மூன்று குழந்தைகளும் மாடிப் படிகட்டின் ஓரத்தில் உள்ள கம்பியில் இறந்த நிலையிலும், ஸ்ரீஜா மற்றும் ஷாஜி ஆகியோர் அறையில் தூக்கில் தொங்கி நிலையிலும் இறந்து கிடந்தனர். மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா, ஷாஜி ஆகியோர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "ஹோம் நர்ஸிங் வேலை செய்துவந்த ஸ்ரீஜாவிற்கு சுனில் என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் எட்டு மாதங்ககுக்கு முன்பு கட்டடம் கட்டும் வேலை செய்யும் ஷாஜியுடன் ஸ்ரீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கணவன் சுனிலைப் பிரிந்த ஸ்ரீஜா ஒரு கோயிலில் ஷாஜியை மே 16-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து ஸ்ரீஜா தனது மூன்று குழந்தைகளுடன் முதல் கணவன் சுனிலுக்குச் சொந்தமான வீட்டில் ஷாஜியுடன் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்து ஸ்ரீஜா வெளியேற வேண்டும் என்று சுனில் போலீஸில் புகார் செய்திருந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு ஸ்ரீஜா அழைக்கப்பட்டிருந்தார். காலையில் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலையில் குழந்தைகளைக் கொன்று ஷாஜியுடன் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்றார்.

மூன்று குழந்தைகளைக் கொன்று இருவர் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in