நடை, ஓட்டம், கட்டளையிடுதல் போட்டி: பரிசுகளை அள்ளிச் சென்றது 250 நாட்டு நாய்கள்!

நாட்டு நாய்கள் கண்காட்சி
நாட்டு நாய்கள் கண்காட்சி

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நாட்டு நாய்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட நாட்டு நாய்கள் பங்கேற்று பரிசுகளை அள்ளிச்சென்றன.

சமீப காலமாக பொதுமக்களிடையே நாட்டு நாய் வளர்ப்பு என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக தேசிய அளவிலான ஒரு நாள் நாட்டு நாய் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட நாட்டு நாய்கள் கொண்டுவரப்பட்டன. இதில், சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம், கன்னி உள்ளிட்ட நாய் வகைகள் பங்கேற்றன. பங்கேற்ற நாய்களுக்கு நடை, ஓட்டம், கட்டளையிடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கென தனித்தனியாக போட்டி நடைபெறுகிறது.

போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இலக்கியம் மற்றும் வரலாற்றில் நாட்டு நாய்களின் பங்கு குறித்து விளக்கும் வகையில் கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நாட்டு நாய்களின் உணவு, பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மேலாண்மை குறித்து விளக்கும் வகையில் பத்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நாட்டு உயிரினங்களை பாதுகாப்பது அவசியம் என்றும், அதற்காக அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in