அதிகாலையில் அடுத்தடுத்து வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்: குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்

குண்டு வீச்சில் சேதமடைந்த ஜன்னல்
குண்டு வீச்சில் சேதமடைந்த ஜன்னல்

மக்கள் வசிக்கும் பகுதியில் அதிகாலை நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள நாராயணத்தேவன்பட்டியில் இருந்து சுருளி அருவிக்குச் செல்லக்கூடிய சாலையில் இருக்கக்கூடிய குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம், திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது‌. இதனால் உறங்கியவர்கள் எழுந்து சென்று வெளியே பார்த்தபோது சிலர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

வெடிகுண்டு வீசப்பட்ட ஒரு பகுதி
வெடிகுண்டு வீசப்பட்ட ஒரு பகுதி

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் இரு குழு இளைஞர்களுக்குள் பிளக்ஸ் போர்டு வைப்பதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவு, பூஜை அறை மற்றும் சர்ச் வாசல் உள்ளிட்ட இடங்கள் சேதமடைந்துள்ளது‌. மேலும், அப்பகுதியில் ஆறு வெடிகுண்டுகள் வெடித்துக் கிடந்துள்ளன. காவல்துறையினர் அவற்றின் வெடித்த பாகங்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது அவை நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in