தென்காசியில் ஓட்டமெடுத்த கள்ள நோட்டு கும்பல்: சமயோசிதமாக வளைத்த கரூர் போலீஸ்!

தென்காசியில் ஓட்டமெடுத்த கள்ள நோட்டு கும்பல்: சமயோசிதமாக வளைத்த கரூர் போலீஸ்!

பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி தென்காசியில்  பொதுமக்களிடம் பணத்தை அபகரித்து ஓட்டமெடுத்த கள்ள நோட்டு கும்பலை கரூர் போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் தென்காசி மாவட்டத்திலன் பல பகுதிகளிலும் ஆயிரம் ரூபாய்க்கு 2000 ’ரூபாய்’ என கள்ளநோட்டு புழக்கத்துக்கு முயன்று வந்தது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்களும் எழுந்தன. அதையடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி காவல் நிலைய போலீஸார், இந்த கும்பலை மடக்கி பண மோசடி வழக்கில் கைதும் செய்துள்ளனர். ஆனாலும் வெளியே வந்த அந்த கும்பல் மீண்டும் பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்துவிட்டு அங்கிருந்து ஒரு  காரில் தப்பி வந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவல் திருச்சி சரக காவல்துறைக்கு  தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு அந்த  காரை வழிமறித்து அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  உள்ள அனைத்து பிரிவு போலீஸாருக்கும் இந்த  தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால்  மாவட்டம் முழுவதும் போலீஸார்  உஷாராக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடா கோயில் பிரிவு அருகே, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான  போலீஸார் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்குரிய கார் வருவது தெரிய வந்தது. அதனையடுத்து  செயற்கையாக போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி அந்த காரை வழிமறித்தனர். அந்தக் காரில் இருந்த நாமக்கல் மாவட்டம் சமயசங்கிலியை சேர்ந்த சீனிவாசன், திருச்செங்கோட்டை சேர்ந்த பூபதி, ஐயப்பன், செந்தில்குமார் ஆகியோரையும் செந்தில்குமாரின் மனைவி முத்துமாரி மற்றும் கார் ஓட்டுநர் ஞானசேகர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் பூபதி என்பவர் போலீஸ் உதவி ஆய்வாளர் அடையாள அட்டை, அதற்கான சீருடை ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. அத்துடன் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டையும் வைத்திருந்தார். இது குறித்து தகவல் அளித்ததன் பேரில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் நிலைய போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in