சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த 3 தொழிலாளிகள்: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 19 ஆனது

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து உயிரிழந்த 3 தொழிலாளிகள்: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 19 ஆனது

தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை  இன்று காலை நிலவரப்படி 19 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள  எக்கியார்குப்பத்தில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட  கள்ளச்சாராயத்தைக்  குடித்ததால்  முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில்  உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டு நேற்று வரை 11 பேர்  உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பெரும்பாலானோர் அனுமதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் போதிய உயர் சிகிச்சை அளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.  இந்த நிலையில் அங்கு வந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டு சென்றார்.

ஆனாலும் அத்தகைய சிகிச்சை எதுவும்  அளிக்கப்படவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தநிலையில் நேற்று முதல்வர் வந்து சென்றதற்குப் பிறகு  இன்று காலை வரையில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இன்று காலை நிலவரப்படி எக்கியார் குப்பத்தை சேர்ந்த  மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே  எத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் கள்ளச்சாராய  சாவுகளின்  எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சாவுகள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in