ஆறிப்போன ஆம்லெட்டா தருகிறாய்?:  ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலர் மகன்!

ஆறிப்போன ஆம்லெட்டா தருகிறாய்?: ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலர் மகன்!

ஆறிப்போன ஆம்லெட்டை சப்ளை செய்ததால் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அடியாட்களோடு வந்து அவரைத் தாக்கிய கவுன்சிலரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ளது அத்திகட்டானூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாரமங்கலம் - சேலம் பிரதான சாலையில் கடந்த 6 மாதங்களாக எஸ்.பி.குமரன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் கடந்த 7-ம் தேதி இந்த கடைக்குச் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர் சாப்பிடுவதற்காக ஆம்லெட் ஆர்டர் கொடுத்துள்ளார். ஏற்கனவே தயார் நிலையில் இருந்த, சூடு இல்லாத ஆம்லெட்டை அவருக்கு செந்தில்குமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ‘இந்த ஏரியாவுல எப்படி கடை நடத்துறீங்கன்னு பார்ப்போம்’ என செந்தில்குமாரை அரவிந்த் மிரட்டியுள்ளார். மேலும் தொலைபேசி மூலமாக நண்பர்களை வரவழைத்த அரவிந்த், அவர்களுடன் சேர்ந்து செந்தில்குமாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தகராறில் செந்தில்குமாரின் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்ததை அடுத்து, அரவிந்த் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்தை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “நான் 6 மாதங்களாக தாரமங்கலத்தில் ஓட்டல் நடத்தி வருகிறேன், கடந்த 6-ம் தேதி ஒருவர் என்னுடைய ஹோட்டலுக்கு வந்து அது சரியில்லை, இது சரியில்லை எனக் கூறி தகராறு செய்தார். அடுத்த நாளே மதுபோதையில் வந்த அவர் ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்தார். அவருடன் வந்த அடியாட்கள் என்னை அடித்துவிட்டு போனார்கள். இதில், கண் மற்றும் நுரையீரல் பகுதி அதிகமாக அடி விழுந்து, மூச்சு விடச் சிரமமாக உள்ளது. இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆளுங்கட்சி ஆதரவு இருப்பதாலும், கவுன்சிலர் மகன் என்பதாலும் சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகியும் அவர் மீது காவல்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in