தடுப்பூசி விஷயத்தில் தடுமாற்றமா?

தடுப்பூசி விஷயத்தில் தடுமாற்றமா?

நாடு முழுதும் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்துவது, வீடு தேடித் தடுப்பூசி எனப் பல்வேறு வகைகளில் மத்திய அரசும் மாநில அரசுகளும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், தடுப்பூசி போடப்படுவதில் முறைகேடுகளும் தவறுகளும் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஹைதராபாதிலிருந்து வரும் தகவல்கள் ஓர் உதாரணம்.

அந்நகரில், முதல் தவணை மட்டும் தடுப்பூசி போட்டவர்களுக்கு, 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுவிட்டதாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று நீண்டநேரம் வரிசையில் நின்றும் தடுப்பூசி போட வாய்ப்பில்லாமல் திரும்புபவர்களுக்கு, ‘முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது’ எனும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, விமானப் பயணம் மேற்கொள்பவர்களும் உண்டு. கல்வி நிறுவனங்களிலும் இப்படிக் கிடைக்கும் சான்றிதழ்களைச் சில மாணவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மறுபுறம், 2 தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு ஒரே ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்திக்கொண்டதாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் நடக்கிறது. இதனால், யாருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது, யாருக்குச் செலுத்தப்படவில்லை எனும் உறுதியான தகவல்கள் அரசின் வசமே இல்லாமல் போகும் ஆபத்து இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, வீடு தேடி தடுப்பூசி எனும் திட்டத்தின்கீழ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் படும் சிரமம் தனி. தடுப்பூசிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், சுகாதாரப் பணியாளர்களை அலட்சியம் செய்வதும் பல இடங்களில் நடக்கின்றன. தமிழகத்திலும் இந்தப் பணியின்போது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சொல்லி மாளாதவை. இங்கும் தடுப்பூசி தவணை தொடர்பான குழப்பங்கள் சில இடங்களில் நடக்கின்றன.

புதிய முகம் காட்டி அச்சுறுத்தும் ஒமைக்ரானை எதிர்கொள்ள தடுப்பூசி விஷயத்தில் கூடுதல் கவனம் காட்ட வேண்டியதும், நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டியதும் அரசின் கடமை. தடுப்பூசி குறித்த அறிவியல்பூர்வமான உண்மைகளை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பது மக்களின் பொறுப்பும்கூட!

Related Stories

No stories found.