
தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள், கரோனா தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. புதிய வகை கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை செய்யப்படும். தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. தமிழத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கரோனா பாதிப்பு உள்ளது. கடந்த 6 மாதங்களாக கரோனாவால் எந்த உயிரிழப்பும் தமிழகத்தில் ஏற்படவில்லை” என்றார்.