`மார்ச் 31 முதல், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம்'

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
`மார்ச் 31 முதல், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம்'

‘மார்ச் 31-ம் தேதிக்குள் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம்’ என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா அச்சுறுத்திய நிலையில், அன்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கால் பலர் வேலை மற்றும் பொருளாதாரத்தை இழந்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். முதல் அலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, 2-வது அலை மக்களை கடுமையாக அச்சுறுத்தியது. பல குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்தன.

இந்த அலையும் ஓய்ந்து ஓரளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், 3-வது அலை வந்தது. ஆனால், உயிரிழப்புகள் அந்த அளவுக்கு இல்லை. இதனால், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அடுத்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவது மட்டுமின்றி, இறப்புகளும் குறைந்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘நாடு முழுவதும் அனைத்து கரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளலாம். பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம்.

கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in