ஒரே பள்ளியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு கரோனா: ஊர் மக்கள் பீதி!

ஒரே பள்ளியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு கரோனா: ஊர் மக்கள் பீதி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கரோனா தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 31,707 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,765 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,93,599 பேராக அதிகரித்துள்ளது.

கரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 18,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கரோனா பாதிப்பு குணமடைந்து 2,103 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று கரோனா பாதிப்பால் திருவாரூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 38,028 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,011 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், கோயம்புத்தூரில் 125 பேருக்கும், திருவள்ளூரில் 184 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 124 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 13 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 170 பேர் படிக்கின்றனர். இதில் சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் 72 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது இன்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே பள்ளியில் 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in