காவல்துறை அதிகாரி என காதல் ஜோடிகளை மிரட்டிய கொள்ளையன்: மாறுவேடமிட்டு தூக்கிய போலீஸ்

காவல்துறை அதிகாரி என காதல் ஜோடிகளை மிரட்டிய கொள்ளையன்:  மாறுவேடமிட்டு தூக்கிய போலீஸ்

சென்னையில் காதல் ஜோடிகளைக் குறிவைத்து காவல் துறை அதிகாரி என தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீஸார் மாறுவேடமிட்டு கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூர் - மீஞ்சூர் சாலையில், செப். 16-ம் தேதி இரவில் இளம்ஜோடி காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது டூவீலரில் அங்கு வந்தவர், தன்னை காவல் துறை அதிகாரி எனக்கூறி, சிசிடிவி கேமரா மூலம் எங்கள் அதிகார்கள் கண்காணிப்பதால் உங்களை விசாரணை நடத்த வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் அவர்களிடமிருந்து செல்போன், 4 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதே சம்பவத்தைப் போல செப். 17-ம் தேதி வெள்ளவேடு பகுதியில் இளம்ஜோடியிடம் 6 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையன் சிவராமன் இந்த தொடர் சம்பவத்தில் ஈடுபட்டது வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார், இளம்ஜோடி போல மாறுவேடத்தில் வெள்ளவேடு சுங்கச்சாவடி பகுதியில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த சிவராமன், இளம்ஜோடிகள் என நினைத்து அவர்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீஸார் எனத் தெரிந்ததும் தன்னிடமிருந்த கத்தியைக் காட்டி அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றார். ஆனால், மதுரவாயல் சுங்கச்சாவடியில் போலீஸார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கொள்ளையன் சிவராமன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 45 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in