மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு; நாகர்கோவிலில் சிக்கிய அசாம் இளைஞர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு;  நாகர்கோவிலில் சிக்கிய அசாம் இளைஞர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கர்நாடக  மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் வசித்து வரும் அசாம் வாலிபர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மங்களூரில்  சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று  திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் இது தற்செயலான  தீ விபத்து என்று கருதப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில்  கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல் என்று கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தெரிவித்தார். இதில் எரிந்த நிலையில் இருந்த குக்குருடன்,பேட்டரியும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் இது குக்கர் வெடிகுண்டு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து  கர்நாடக போலீஸாருடன்  மத்திய விசாரணை அமைப்புகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்டோவில் பயணித்த பயணியும், ஆட்டோ ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்டோவில் இருந்த பயணியால் போலீஸாரால் பேசமுடியவில்லை. இருந்தும் போலீஸாரின் தீவிரவிசாரணையில் அவர் பெயர் ஷாரிக் என்பதும், நதிக்கரை குண்டுவெடிப்பு வழக்கில் ஷாரிக்கை ஏற்கெனவே போலீஸார் தேடிவந்ததும் தெரியவந்தது.

அவரிடம் கையில் இருந்த ஆதார்கார்டும் போலியானதாக இருந்தது. அது பிரேம்ராஜ் என்னும் ரயில்வே ஊழியருக்குச் சொந்தமானது. அவர் தன் ஆதார்கார்டு தொலைந்துவிட்டதாகக் கருதிய நிலையில் ஷாரிக் அதை திருடி தீவிரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

முன்னதாக மாதஹள்ளி பகுதியில் ஷாரிக் குடியிருந்த வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போதுதான் இதில் ஷாரிக் மட்டுமல்லாது, பரந்த நெட்வொர்க் இதன் பின்னால் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்த ஷாரிக், அங்கு சுரேந்திரன் என்ற ஆசிரியரின் ஆதார்கார்டைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த சுரேந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரைப் பிடித்து போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னணி என்ன?

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ஷாரிக்கின் தொலைபேசி எண்ணின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அஜீம் ரகுமானின் எண்ணில் இருந்து அவருக்கு அழைப்பு சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அஜீம் ரகுமானுக்கு சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். இவர் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பாஸ்போர்ட் எடுத்துக்கொடுக்கும் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவர் அப்பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துவருகிறார். இவருக்கும், ஷாரிக்கிற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாத செயல்கள் எதையும் அரங்கேற்றிவிட்டு ஷாரிக் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றாரா என்ற கோணத்திலும் அஜீம் ரகுமானிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in