அடுத்த பிரதமர் அமித் ஷாவா? - அசாம் முதல்வர் பேச்சால் சர்ச்சை

அடுத்த பிரதமர் அமித் ஷாவா? - அசாம் முதல்வர் பேச்சால் சர்ச்சை

அரசியல் தலைவர்கள் உரையாற்றும்போது தவறுதலாக எதையேனும் பேசிவிட்டால் எதிர்க்கட்சியினர் உற்சாகமாகிவிடுவார்கள். தவறுதலாகச் சொன்ன வார்த்தைகளை வைத்தே அவர்களைக் கிண்டல் செய்வார்கள். அந்த வார்த்தைகளை வைத்து அரசியல் ரீதியான வியூகங்களையும் வகுப்பார்கள். அப்படியான ஒரு சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா சமீபத்தில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது, அமித் ஷாவைப் பிரதமர் என விளித்தார். அசாமிய மொழியில் உரை நிகழ்த்திய அவர், அமித் ஷாவைப் பிரதமர் என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல், பிரதமர் மோடியை உள் துறை அமைச்சர் என்றும் குறிப்பிட்டார். பெயர்க் குழப்பத்தில்தான் அப்படிப் பேசினார் என பாஜகவினர் விளக்கமளித்திருந்தாலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதை விடுவதாக இல்லை.

அடுத்த பிரதமராக அமித் ஷாவை முன்னிறுத்துவதற்கான முயற்சி இது என சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் அசாம் காங்கிரஸ் கட்சியினர்.

இதுதொடர்பாக அசாம் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ‘அசாம் முதல்வராக சர்பானந்த சோனோவால் ஜி இருந்தபோது தேஜ்பூர் எம்.பி பல்லப் லோச்சன் தாஸ், அப்போது அமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மாவைப் பல முறை முதல்வர் என்றே பொது மேடைகளில் அழைத்தார். இப்போதைய முதல்வரும் அதையே செய்கிறாரா? பாஜக தனது அடுத்த பிரதமர் யார் என முடிவுசெய்துவிட்டதா?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

அத்துடன், ‘இருவேளை மோடிக்குப் பதிலாக அமித் ஷாவைப் பிரதமராக்குவதற்கான பிரச்சாரமும் தொடங்கிவிட்டதா? பல்லப் லோச்சன் தாஸ் உதாரணத்தை வைத்துப் பார்க்கும்போது அது தவறுதலாகப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை’ என்றும் காங்கிரஸ் கூறியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in