அரசு இலக்கிய விழாவில் மனக்கசப்பு: கவிஞர் வேதனை பதிவால் சர்ச்சை

அரசு இலக்கிய விழாவில் மனக்கசப்பு: கவிஞர் வேதனை பதிவால் சர்ச்சை

தமிழக அரசின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய பொருநை இலக்கிய விழா’ நேற்றும், நேற்று முன் தினமுமாக இரு தினங்கள் நடந்தது. இதில் தான் சங்கடத்தை அனுபவித்ததாக கவிஞர் லெட்சுமி மணிவண்ணன் பொதுவெளியில் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கவிஞர் லெட்சுமி மணிவண்ணன் தன் முகநூல் பக்கத்தில், “பொருநை இலக்கிய விழாவில் நகைப்பிற்குரிய ஏராளம் குளறுபடிகள். ஒரு இலக்கிய விழாவை இந்த திராவிட அரசால் திறம்படச் செய்ய இயலாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பள்ளிக் குழந்தைகளை வலிந்து அழைத்து வந்து அரங்குகளில் இறக்குகிறார்கள். வந்திருக்கும் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே விளங்கவில்லை. குழந்தைகளிடம் தனியே அதற்கென்றே உரையாடுவது வேறு விஷயம். வழியின்றி பார்வையாளர்கள் என்கிற பெயரில் அவர்களைக் கொண்டு நிரப்புவது அராஜகம்

இரண்டு அரங்குகளில் பங்கு பெற்றேன். அதில் ஒன்று கவிதை அமர்வு. மூன்று கவிஞர்கள் பங்கேற்றோம். அதில் சபரிநாதனுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊதியம். அதே அமர்வில் பங்கேற்ற எனக்கு மூவாயிரம். சபரிநாதன் பதறி," இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னிடம் கொடுங்கள்" என்றார். "உங்களுக்குக் கிடைத்தது உங்களுக்கு" என்று அவருக்குச் சொன்னேன். அவர் கழுகுமலையில் இருந்து வருகிறார். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருக்கிறேன். முதலில் அரசு இப்படி எளிய கூலியை சரஸ்வதிக்குத்  தருவதே தவறு .இப்படி தந்தால் ஒழுங்கு செய்யும் அதிகாரிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடிகளாக  காலங்காலமாக இருக்கும் இடதுசாரிகளுக்கும் மதிப்பே உண்டாகாது. அதிலும் இடது,வலது, சாதி, மத, என்ஜிஓ என்னும் பாரபட்சங்கள். உண்மையில் இவை அசிங்கங்கள். இத்தகைய விழாக்களில் பத்தாயிரத்திற்கும் குறைவாக எழுதுகிறவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. பாரபட்சம் கடைபிடித்தல் கூடவே கூடாது.

இந்த பாரபட்சம் எங்கிருந்து வருகிறது? இலக்கியத்தில் இருந்து அல்ல. இடதுசாரிகளே அரசின் பண்பாட்டு புரோக்கர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் நுட்பமான பாரபட்சம் கொண்டவர்கள். இத்தகைய குறைபாடுகள் இலக்கியத்தின் நன்மதிப்பை தரம் இறக்கக் கூடியவை. கடமைக்காக அரசு இலக்கிய விழாக்கள் உருவாக்கி இலக்கியத்தை இழிவு செய்யக் கூடாது

இரண்டாவது அமர்வுக்காக பணமே தரவில்லை. இரண்டு அட்டைத் தட்டிகள் தந்திருக்கிறார்கள். அதை வைத்து நான் என்ன செய்ய? தமிழக முதல்வருக்கு தபால் செய்து விடட்டுமா?”என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in