சென்னையில் ‘சிவப்பு விளக்கு’..?: சர்ச்சை கிளப்பிய தங்கும் விடுதி

சென்னையில் ‘சிவப்பு விளக்கு’..?: சர்ச்சை கிளப்பிய தங்கும் விடுதி

சென்னை தனியார் தங்கும் விடுதி ஒன்றில், பாலியல் விடுதிக்கு இணையான வகையில் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் பல தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்னமலை என்.ஜி.ஆர் காலனியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே ’ஹோட்டல் நான் வெஜ்’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்கும் விடுதியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

’1000 ரூபாய்க்கு அறை வாடகைக்கு விடப்படும். எந்த பெண்ணை வேண்டுமானாலும் அழைத்து வந்து உல்லாசமாக இருக்கலாம்’ என்பதாக, ஆங்கில ஆபாச வாசகத்தை உள்ளடக்கி ஒரு எல்இடி விளம்பரம் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒருவர், அந்த விளம்பர பலகையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும் அதில், தமிழக முதலமைச்சர் மற்றும் சென்னை காவல்துறையை டேக் செய்திருந்தார். ’சென்னையில் இப்படியொரு சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் தனது பதிவில் கோரியிருந்தார். நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு ஆட்சேபம் பதிவிட்டனர். ’சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியா..?’ என்று கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

இந்த பதிவு ட்விட்டரில் வைரலானது. காவல்துறை தரப்பில் இது தொடர்பாக விசாரித்தபோது, ‘சம்பவம் தொடர்பான புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் சம்மந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியிடம் விளக்கம் கேட்டு, அதன்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

இவற்றின் மத்தியில் சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை, சம்மந்தப்பட்ட தங்கும் விடுதியின் நிர்வாகமே அகற்றியாக தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in