தொடர்ந்து பதற்றம்: கோவை உளவு பிரிவுக்கு உதவி ஆணையர்கள் நியமனம்!

தொடர்ந்து பதற்றம்: கோவை உளவு பிரிவுக்கு உதவி ஆணையர்கள் நியமனம்!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகர் உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவுகளுக்கான புதிய உதவி ஆணையர்களை நியமித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்களில் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற 7 பெட்ரோல் குண்டுவீச்சுச் சம்பவங்களால் கோவை மாநகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4,000 ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் சம்பவயிடங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில் காலியாக இருந்த கோவை மாநகர உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவுக்கு, புதிதாக உதவி ஆணையர்களை நியமித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாநகர சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையாளராக இருந்து வந்த பார்த்திபன், உளவுப் பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்து வந்த அருண், சிறப்பு உளவுப் பிரிவின் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே உளவுப் பிரிவின் உதவி ஆணையர் பொறுப்பை கவனித்து வந்த முருகவேல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில், காலியாக இருந்த உளவுப் பிரிவு உதவி ஆணையர் பொறுப்பிற்கு தற்போது அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வந்த தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்வங்களைத் தொடர்ந்து உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவுக்கான புதிய உதவி ஆணையர்கள் நியமித்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in