கேரளத்தில் தொடரும் கன மழை: பறிபோன 4 உயிர்கள்

கேரளத்தில் தொடரும் கன மழை: பறிபோன 4 உயிர்கள்

கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழையால் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. தொடர் கனமழையால் ஒரு குழந்தை உள்பட இதுவரை நான்குபேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாத இறுதியில் 27-ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே பெய்யும் கனமழையால் கேரளத்தின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக மழை நீடிப்பதால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்யும்வகையில், ஏழு கம்பெனி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் முகாமிட்டுள்ளனர். ஆபத்தான இடங்களிலும், அணையோரப் பகுதிகளிலும் இருந்த 330 பேர், முன்னெச்சரிக்கை நடவடிகையாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையிலும், நீராதாரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டியில் மழையில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை வேடிக்கைப் பார்க்க சென்றபோது தவறி விழுந்த 9 வயது சிறுவன், முப்பத்தடம் குளத்தில் தவறி விழுந்த ஆதித்யன்(17) ஆகியோர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதேபோல் தேவிக்குளம் பகுதியில் கனமழையில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து இருவர் பலியாகினர். இதேபோல் அணையோரப் பகுதிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவுநேர பயணங்களை தவிர்க்குமாறும், மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in