மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் அப்படியே வெளியேற்றம்!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

கடந்த ஒரு வார காலமாக குறைந்திருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலிலேயே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நல்ல முறையில் வந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக ஜூன் மாதத்திற்கு முன்பாக மே மாதம் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து சுமார் 20,000 கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் குறைந்தது. அதனை ஈடு கட்டும் விதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு நீர்வரத்து கடந்த மாதம் கிடுகிடு என அதிகரித்தது.

அதன்காரணமாக கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது. அதனையடுத்து அணைக்கு வந்த மொத்த நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. அதன் காரணமாக சுமார் 1.50 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு அது கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த பத்து நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகம் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கடந்த 17-ம் தேதி இரவு நிறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் கர்நாடகத்திலிருந்து காவிரியில் வரும் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்தது. மாலையில் வினாடிக்கு 20,000 கனஅடியாகவும் இரவில் வினாடிக்கு 30,000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பும் தொடங்கியுள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், எட்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் 16 கண் பாலத்தின் வழியாகவும் நீர் திறக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி 16 கண் பாலம் வழியாக 17,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆக மொத்தம் அணைக்கு வரும் மொத்த நீரான 40,000 கனடியும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அது அப்படியே திறந்து விடப்பட்டு, மீண்டும் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்படும் நிலையே ஏற்படும். தற்போதைய நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in