சிறுவாணி அணையில் தொடர்ந்து நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் தட்டுப்பாடு - தொழில்துறை பாதிக்க வாய்ப்பு!

சிறுவாணி அணையில் தொடர்ந்து நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் தட்டுப்பாடு - தொழில்துறை பாதிக்க வாய்ப்பு!

சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 31 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர்மட்டம் சரிவால் மாநகர மக்களுக்கு குடிநீர் தேவை மற்றும் தொழில் துறையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களும், 100 வார்டுகளும் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 6,500 தெருக்கள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. இது தவிர வேலைக்காக தினமும் வந்து செல்வோர்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்வோர் என சுமார் 10 லட்சம் பேர் உள்ளனர். கோவை மாநகரின் குடிநீர் தேவையை பில்லூர், சிறுவாணி அணைகள் பூர்த்தி செய்கின்றன. இதில் கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணை 49.53 அடி உயரம் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் கேரளா அரசு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால் அதன் பின் பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்தாலும் 45 அடிக்கு மேல் உயர்த்த அனுமதிக்கவில்லை.

சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்து வரும் காரணத்தினால் நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது குறைந்துள்ளது. தற்போது சிறுவாணியின் நீர்மட்டம் 31 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 101 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 97 மில்லியன் லிட்டருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 96 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் 88 எம்.எல்.டி. குடிநீர் கோவை மாநகராட்சிக்கும், மீதியுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மாநகராட்சி சார்பாக மாற்று திட்டத்தை செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தான் உள்ளன. தொழில் நிறுவனங்களில் இயந்திர தேவைக்களுக்காக சிறுவாணி நீர்தான் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்தால் தொழில்துறையில் பாதிப்பு ஏற்படும்.

இது குறித்து தொழில்துறையினர் கூறுகையில், ‘‘தொழில் நிறுவனங்களில் சிறுவாணி அணையின் தண்ணீர் ஆட்டோமேட்டிக் இயந்திரங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங்களில் போர்வெல் தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சிறுவாணி அணையின் நீர் தொழில் நிறுவனங்களுக்கும் முக்கிய தேவையாக உள்ளது. அதேபோல் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்களின் குடிநீர் தேவைக்காகவும் சிறுவாணி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கேரளா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் கேரளா அரசுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in