`நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'- தமிழக அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

`நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'- தமிழக அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட 2018-ல் 308 கோடி ரூபாய் ஒதுக்கியும், ஒரே ஒரு ஸ்ட்ராங் ரூம் மட்டும் கட்டப்பட்டுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட வேண்டும், அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கோயில்கள் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என நீதிபதிகள், அறநிலையத் துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, ஒரு ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு 308 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், ஒரே ஒரு அறை மட்டும் கட்டப்பட்டுள்ளதா என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு சிலையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது எனவும், ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ள நிலையில் அத்தனை சிலைகளுக்கும் ஒரு ஸ்ட்ராங் ரூம் போதுமா எனவும் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும், அறநிலையத் துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in