ரவுடிகள், விபசார புரோக்கர்களுடன் தொடர்பு: போலீஸ்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

ரவுடிகள், விபசார புரோக்கர்களுடன் தொடர்பு:  போலீஸ்காரர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

பிரபல ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏற்கெனவே இரண்டு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கடல்ஜோதி மீது கிண்டி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் ரவுடி கடல்ஜோதி காவலர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கடந்த தேர்தலின் போது பேசப்பட்டதாக கூறப்படும் அந்த ஆடியோவில் 6 ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டப்படும் வீடு ஒன்றை காவலர் திருமாலுக்கு தர இருப்பதுபோல் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவிற்கு, ரவுடி கடல்ஜோதி அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது பற்றி தலைமை காவலர் ஏகாம்பரம் ரவுடிக்கு தகவல் தெரிவிக்கும் ஆடியோவில் வெளியானது.

இதனையடுத்து ரவுடி கடல்ஜோதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கிண்டி தலைமைக் காவலர் ஏகாம்பரம் மற்றும் காவலர் திருமால் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டார். இதனை தொடரந்து விபசார புரோக்கரிடம் அத்துறையை சேர்ந்த காவலர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு போலீஸார் ரவுடிகள், விபசார புரோக்கர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு சட்டவிரோத செயலுக்கு துணை போவது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியது.

பின்னர் இது குறித்து அதிகாரிகள் துறை ரீதியாக நடத்திய விசாரணையில் மேலும் சில காவலர்கள் ரவுடி மற்றும் விபசார புரோக்கர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவை சேர்ந்த தனிப்படை காவலர் கருப்பையா மற்றும் சைதாப்பேட்டை நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே காவலர் கருப்பையா எம்ஜிஆர் நகரில் பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளானதால் சாத்தாங்காடு காவல் நிலையத்திற்கும், அதேபோல் வேளச்சேரி நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த காவலர் வேல்முருகன் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து சட்டவிரோதமாக ஸ்பா நடத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சைதாப்பேட்டை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in