873 காவலர்களுக்கு பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்பா?: கேரள காவல்துறை, என்ஐஏ திட்டவட்டமாக மறுப்பு

873  காவலர்களுக்கு பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்பா?: கேரள காவல்துறை, என்ஐஏ திட்டவட்டமாக மறுப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருடன் கேரள போலீஸாருக்குத் தொடர்பு இருப்பதாக என்ஐஏ அறிக்கை கொடுத்திருப்பதாக கேரளத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது தவறான தகவல் என கேரள காவல்துறை மறுத்துள்ளது.

காவல்துறையின் ட்விட்ட்ர் விளக்கம்
காவல்துறையின் ட்விட்ட்ர் விளக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த சின தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 29-ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்குத் தடைவிதித்தது.

முன்னதாக கேரளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இல்லங்களில் சோதனை நடத்தியதைக் கண்டித்து கேரளத்தில் அந்த அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போதிய கால அவகாசம் இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். கேரள உயர்நீதிமன்றமும் இதுகுறித்து தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரோடு, கேரள காவல்துறையில் 873 காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ கேரள காவல் துறைத் தலைவருக்கு அறிக்கை கொடுத்திருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இதை மறுத்து கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “873 காவலர்களுக்கு பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏ அறிக்கை கொடுத்திருப்பதாக சில ஊடகங்களில் வரும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது.”என்றும் விளக்கமளித்துள்ளது. இதேபோல் என்ஐஏவும் இதை மறுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in