
காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க காட்டு வழியாகச் செல்லும் 24 கி.மீ தண்டவாளத்தை அகற்ற வேண்டும் என கோவை ரயில்வே உபயோகிப்பாளர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை ரயில்வே உபயோகிப்பாளர் இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் நிர்வாகி சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கோவையின் வளர்ச்சி மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு, மதுரை, திருச்சி போல கோவையை தனிக்கோட்டமாக உடனடியாக உயர்த்தி, போத்தனூரில் தலைமையகம் இயங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலேயே போத்தனூர், தென்னிந்திய ரயில்வேயின் தலைமையிடமாக செயல்பட்டது.
கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில்வே பிரிவு தற்போது இருக்கும் பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் ரூபாய் 1,000 கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் போன்ற சகல வசதிகளும் பெற்ற ரயில் நிலையமாக மாற்றப்பட வேண்டும்.
புதிதாக டைடல் பார்க், விமானநிலையம் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம் சிட்கோ நிறுத்தம் ரயில் நிலையங்கள் உருவாக்க வேண்டும். கோவையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை, திண்டுக்கல் போன்ற ரயில் வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
ரயில் இயக்கத்தில் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்களைப் பெறவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' முறையை ரயில்வே ஏற்றுக்கொண்டது. கோவை கோட்டத்தில் முழு தானியங்கி பிளாக் சிக்னலிங் (ஏபிஎஸ்) பிரிவு செயல்படுத்தப்பட வேண்டும், இது அதிக ரயில் சேவைகளை இயக்குவதற்கான வரி திறனை அதிகரிக்கும்.
கோவை முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 130 கி.மீ வேகத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வாளையார் - காஞ்சிக்கோடு ரயில் பாதையில் காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க ஒரே நிரந்தரத் தீர்வு, முழு நீளத்திற்கும் உயர்த்தப்பட்ட ரயில் பாதையாகும்.
தற்போது 48.26 கிமீ மற்றும் 52.56 கிமீ நீளத்திற்கு இரண்டு மின்பாதைகள் உள்ளன. காட்டு வழியாகச் செல்லும் 24 கி.மீ தண்டவாளத்தை அகற்றி, காட்டின் வெளிப்புறத்தில் உள்ள 16 கி.மீ ரயில் பாதையுடன் சேர்த்து உயர்த்தப்பட்ட இரட்டை ரயில்பாதையை அமைக்க வேண்டும்" என்றார்.