உடல் முழுவதும் ரத்தக்காயங்கள்: சாலையோரத்தில் சடலமாக கிடந்த கூலித்தொழிலாளி

உடல் முழுவதும் ரத்தக்காயங்கள்: சாலையோரத்தில் சடலமாக கிடந்த கூலித்தொழிலாளி

குமரிமாவட்டம், மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் இன்று காலையில் கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம், எறும்புக்காடு புல்லுவிளையைச் சேர்ந்தவர் ராஜதுரை(50) கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு முருகம்மாள் என்னும் மனைவியும், இருமகன்களும் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜதுரை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலையில் ராஜதுரை மேலகிருஷ்ணன்புதூர் பகுதியில் சாலையோரம் சடலமாகக் கிடந்தார். அவர் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சடலத்தின் அருகில் மதுபாட்டில்களும், செங்கற்கல்களும் கிடந்தன. இதனால் குடிபோதையில் நடந்த தாக்குதலில் ராஜதுரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜதுரை மீது சுசீந்திரம், ராஜாக்கமங்கலம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும் உள்ளன. அவரது அண்ணன் கண்ணன் என்பவரே தன் செல்போனை தம்பி ராஜதுரை திருடிவிட்டதாகக் கொடுத்த புகாரும் அதில் உள்ளது. இதனால் திருட்டு வழக்குத் தொடர்பான முன்விரோதத்தில் ராஜதுரை இரவில் தகராறில் ஈடுபட்டாரா? என்னும் கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in